Tuesday, July 18, 2017

நிழலுக்குள் உயரம்தேடும் மிளகாய் செடிகள்


திறந்தவெளியில், இரண்டடி உயரத்தில் வளரும் புல்லட் ரக மிளகாய்ச் செடிகள், நிழல்வலை குடிலில் எட்டடி உயரம்தொட்டு அதிசயம் செய்கின்றன. 
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில், உள்ள காய்கனி மகத்துவ மையத்தின் செயல் விளக்கத் திடலில் கொத்து கொத்தாக காய்த்துத் தொங்கும் பச்சை மிளகாய்கள், பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை. 
ஒரு சதுர சென்டி மீட்டர் வலைக்குள், 36 சன்னரக துளைகள் இருப்பதால் பூச்சி களுக்கு தடா. 
அடுத்தடுத்து இரண்டு கதவுகளும் இதேவலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், வெளியில் இருந்து பூச்சிகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் செடிகள் சிலுசிலுவென பசுமை படர்ந்து பரவசப் படுத்துகின்றன.
இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 36 க்கு 30 மீட்டர் அளவில் 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்த குடிலில் 1,050 புல்லட் ரக மிளகாய் நாற்றுகள் நடப்பட்டன. 
பயிருக்கு தெளிக்க வேண்டிய பூச்சிமருந்துகளை தவிர்க்கலாம் என்கிறார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சீனிவாசன். அவர் கூறியது: 
தரைப்பகுதியில் பயிர்கள் வளர்க்க வேண்டியபகுதியில், முதலில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் படுகிறது. 
அதன் மேல் பிளாஸ்டிக் நிலப்போர்வை, பாய் போல நீண்ட வரிசையில் விரிக்கப்பட்டு, நாற்று நட வேண்டிய இடம் மட்டும் துளையிடப் படுகிறது.
நாற்று வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் கருப்பு நிற களையை நீக்கும் பாய் விரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் நிலப் போர்வையால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. சொட்டு நீர் வழக்கத்தை விட குறைந்தளவே தரப்படுகிறது.
சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 'பாகர்ஸ்' எனப்படும் நுண்நீர் தெளிப்பான் மூலம் பனிப்புகை போன்ற சிறு துகள்களாக தண்ணீர் தெளிக்கப்படுவதால், 4 டிகிரி வெப்ப நிலை வரை குறைக்கப்படுகிறது. ஒரு துளையின் வழியாக ஏழரை லிட்டர் தண்ணீர் மட்டுமே வரும். 
எட்டு மாதங்களை கடந்த நிலையில், இன்னும் மிளகாய்ச் செடிகள் பலன்தந்து கொண்டிருக்கின்றன. 
வழக்கமாக திறந்தவெளியில் நடப்படும், இதே ரக மிளகாய்ச் செடிகள், இரண்டடி உயரத்தில் செடி ஒன்றுக்கு ஒன்றே கால் கிலோ மிளகாய் வீதம் எட்டுமாதங்கள் வரை கிடைக்கிறது. ஆனால் நிழல்வலை குடிலில் இந்த மிளகாய்ச் செடிகள் அதிகபட்சமாக, எட்டடி உயரம் வரை வளர்வதோடு நிறைய சிம்புகள்விட்டு அதிகபட்சமாக மூன்றரை கிலோ வரை காய்க்கின்றன. 11 மாதங்கள் வரை தொடர்ந்து பலன்தருகின்றன, என்றார்.
இத்தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் சீனிவாசனை 94434 55477ல் தொடர்பு கொள்ளலாம்.
-எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை 


Source : Dinamalar

Monday, July 10, 2017

தேயிலையில் மருந்து தயாரிக்கும் திட்டம்


நீலகிரி தேயிலையில் இருந்து மருந்து தயாரிக்க கைகாட்டி, மகாலிங்கா கூட்டுறவு ஆலைகளில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி பிரிவு துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தொழில் வணிகத் துறையின் கீழ் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தினசரி தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. 
பெரும்பாலான தொழிற்சாலைகளில் சி.டி.சி ரக தேயிலைதூள் உற்பத்தியும் ஒரு சில தொழிற்சாலைகளில் சி.டி.சி ரகத்துடன் ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூளும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை தூளுடன் பசுந்தேயிலையில் மருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து இண்ட்கோ சர்வ் சேர்மன் சிவக்குமார் கூறியதாவது: முதற்கட்டமாக கைகாட்டி மற்றும் மகாலிங்கா தேயிலை தொழிற்சாலைகளில் மருந்து தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு துவக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் விரைவில் இத்தொழிற்சாலைகளில் மதிப்பு கூட்டப்பட்ட மருந்து தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு துவக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்ற கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் படிப்படியாக மருந்து உற்பத்தி செய்யப்படும் என சிவக்குமார் தெரிவித்தார்.

Source : Dinakaran

Friday, July 7, 2017

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

tree

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம்.
அறிகுறிகள்: வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் சாறு வடிந்த நிலையில், சிறு சிறு துளைகள் காணப்படும்.
இந்த துளையினுள் கூன் வண்டு இருப்பதைக் காணலாம். தென்னை மரத்தின் உள் ஓலைகள் மஞ்சள் நிறாகவும், நுனிப்பக்கத்தில் உள்ள நடுகுருத்து வாடிய நிலையிலும் காணப்படும். பின்னர், மரம் முற்றிலும் காய்ந்துவிடும்.
பூச்சி விவரம்: கூன் வண்டின் முட்டையானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
புழுக்கள் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும். வண்டானது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், மார்புப் பகுதியில் 6 அடர்ந்த புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகள் நீல முகத்துடன் காணப்படும்.
மேலாண்மை முறைகள்: கூன்வண்டு தாக்குதலால் காய்ந்து போன மரம், சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன்வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம்.
தென்னந்தோப்பை துய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டின் தாக்குதலைத் தவீர்க்கலாம்.
உழவுப் பணியின்போது தென்னை மரம் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய மரத்தை கூன்வண்டுகள் தாக்கும்.
அதனால், மரத்தை காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்க மணல், வேப்பங்கொட்டை தூளை 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியிலும், மேல் உள்ள மரத்தின் 3 மட்டைகளின் கீழ்ப் பகுதியிலும் இட வேண்டும்.
கூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும் பேரொழியுர் எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை இரண்டு ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தில் மாணிக்கம் என்ற விவசாயின் நிலத்தில் மேற்கொண்ட சோதனையில் இந்த மேலாண்மை முறை நல்ல பயனைத் தந்துள்ளது என்கின்றனர் பெங்களூரைச் சேர்ந்த வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள்.
 Source : Dinamani

நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி


dall

தருமபுரி: பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என். ராஜேந்திரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மேலும் அவர்கள் கூறியது: பயிர் வகையிலே துவரை பயிர் மட்டும் பருவம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறி பயிர் செய்தால் கண்டிப்பாக மகசூல் பாதிக்கும். இதனைப் போக்க, புதிய தொழில்நுட்மான நாற்று நடவு துவரை சாகுபடி முறையைப் பின்பற்றி, துவரையில் அதிக மகசூல் பெறலாம். இதற்கான பருவம் ஆடிப் பட்டம் சிறந்தது.
நாற்றங்கால் தயாரித்தல்: துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரிக்கோடேர்மாவிரிடி போன்றவற்றில் ஏதாவது ஓன்றில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 2?? மைக்ரான் உள்ள 6''-க்கு 4'' அளவுள்ள நெகிழிப் பைகளில் நிரப்பி விதைக்கப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க பைகளைச் சுற்றி 4 துளைகள் போட வேண்டும். பின்னர், விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30 - 35 நாள்கள் பாரமரிக்க வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் முன் இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து, கடினப்படுத்தி பின்பு நடவு செய்தல் நல்லது.
நடவு செய்தல்: தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை, 5-க்கு 3 அடி இடைவெளிலும் ( 2904 பயிர் / ஏக்கர்), காராமணி, உளுந்து போன்ற ஊடுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6-க்கு 3 அடி இடைவெளிலும் (2420 பயிர் / ஏக்கர் ) குழிகள் எடுக்க வேண்டும். நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன், குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு யூரியா 27.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 156 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ இட வேண்டும். இறவைப் பயிர்களுக்கு யூரியா 55 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 312 கிலோ, பொட்டாஷ் 42 கிலோ ஆகிய உரங்களை நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் இட வேண்டும். மேலும், துத்தநாக சல்பேட் 10 கிலோ செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும்.
நுனி கிள்ளுதல்: நடவு செய்த 20-25 நாள்கள் கழித்து அல்லது விதை விதைத்த 50-55 நாள்கள் கழித்து 5 அல்லது 6 செ.மீ அளவுக்கு நுனிக் குருத்தைக் கிள்ளி விடுவதால், பக்க கிளைகள் அதிகரிக்கும். இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கும்.
பயறு வொண்டர் தெளித்தல் : பூ பூக்கத் தொடங்கும் பருவத்தில், பயறு வொண்டரை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் தண்ணீரில் கலந்து இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் பூ உதிர்தலைத் தடுக்கலாம். இதனால் அதிக மகசூல் பெறலாம். மேலும், வறட்சியைத் தாங்கி வளரவும் வழிவகை செய்கிறது.
நாற்று நடவு சாகுபடியின் நன்மைகள்: நடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். துவரை நடவு அதிக ஆழத்தில் செய்யப்படுவதால், நன்கு வேர் வளர்ச்சி காணப்பட்டு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறை செய்யப்படுவதால், பயிர் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் செய்ய முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. இதனால், குறைந்த அளவுக்கு கிடைக்கும் புதிய ரக விதைகளை அதிக பரப்பளவு சாகுபடிக்கு கொண்டு வர முடியும். நுனி கிள்ளுவதால் அதிக பக்க கிளைகள் உருவாகி, அதிக விளைச்சல் கிடைக்கிறது.
எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்தப் புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
 Source : Dinamani

Wednesday, July 5, 2017

சர்க்கரை நோயாளிகளுக்கு 'கறுப்புகாவனி' அரிசி:இயற்கை முறையில் விளைவித்து பொன்னேரி விவசாயி அசத்தல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, 'கறுப்புகாவனி' மற்றும் ஆர்.என்.ஆர்., நெல் ரகங்களை இயற்கை உரங்களை போட்டு, வளர்த்து அறுவடை செய்து விவசாயி அசத்தி உள்ளார்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் நெல் ரகங்களை பற்றி தெரிந்து கொண்டு, அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்.

பெருமிதம்
தற்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படும், 'கறுப்புகாவனி' நெல் ரகத்தினை பயிரிட்டு அசத்தியுள்ளார்.ஐந்து மாதங்கள் பருவ காலம் கொண்ட இந்த ரகத்தினை, தன் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, 37 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார்.

கறுப்பு நிறத்தில் உள்ள இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் வாங்கி செல்வதாகவும், இதில் சர்க்கரை சத்து முற்றிலும் இல்லை எனவும் விவசாயி பெருமிதத்துடன் கூறுகிறார்.
அதேபோன்று, தோட்டக்கலை துறை மூலம், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு, விவசாயம் குறித்து பயிற்சிக்கு சென்றவர் அங்கிருந்து, ஆர்.என்.ஆர்., ரக நெல் விதையை வாங்கி வந்து, விளைவித்து உள்ளார்.இதுவும் சர்க்கரை சத்து குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாகும். தற்போது இந்த வகை நெல் ரகத்தினை தன், 3 ஏக்கர் நிலத்தில்
மீண்டும் பயிரிட்டு உள்ளார்.


அமிர்த கரைசல்

பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை தெளிக்காமல் தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் என, இயற்கை உரங்களை போட்டு விவசாயம் செய்கிறார்.பயிர் வளர்ச்சிக்கு மீன் அமினோ அமிலம், பயிரின் ஊட்டசத்திற்கு பழங்காடி, நோய் தாக்குதலில் இருந்து காக்க
அரிசி கஞ்சி கரைசல், தழை சத்திற்கு அமிர்த கரைசல் என, பல்வேறு வகையான இயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்.
இவரிடம் சர்க்கரை சத்து குறைவாக உள்ள அரிசி இருப்பதை அறிந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாங்கி செல்கின்றனர்.

Source: Dinamalar

Monday, July 3, 2017

ஒரு ஏக்கரில் திசு வாழை சாகுபடி செலவு ரூ.1 லட்சம்; லாபம் ரூ.5 லட்சம்


மதுரை மாவட்டம் மேலுார் அருகே வேப்படப்பை சேர்ந்தவர் வாழை விவசாயி ஜெகதீஸ்வரன். மேலுார் தோட்டக்கலைத் துறை மூலம் திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 'ஜி.9.' ரக வாழையை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் கூறியதாவது: - வீரியமிக்க 'ஜி.9' ரகத்தைச் சேர்ந்த வாழை மரத்தில் இருந்து திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வாழை கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறோம். நோய் தாக்குதல் இருக்காது. வீரியமிக்க வாழை என்பதால் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. வாழை மரத்தின் துார் பகுதி கனமாக இருப்பதால் மழை, காற்று போன்ற இயற்கை இடர்பாடு பாதிப்புகளில் அதிக பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம். தோட்டக்கலை வழங்கும் அட்டவணைப்படி இயற்கை உரத்தை திசு ழைக்கு பயன்படுத்தினால் பிற வாழை விவசாயத்தை விட 3 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.விவசாயி ஜெகதீஸ்வரன் கூறியதாவது: ஒரே நேரத்தில் வாழை தார்களை அறுவடை செய்ய முடிகிறது. பூவன், ஒட்டு போன்ற பிற ரகங்களை சேர்ந்த வாழைகளில் வாழைத்தாரில் உள்ள காய்களின் எண்ணிக்கையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் திசு வாழையில் எடை கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 33 டன் மகசூல் கிடைக்கிறது. ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. லாபம் ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்றார். தொடர்புக்கு 97510 18008.
- எஸ்.பி.சரவணக்குமார் மேலுார்.

Source : Dinamalar

மண்ணில் புதைத்து பயன்படுத்தும் கால்நடை 'ஊறுகாய் புல்' தீவனம்

மழைக் காலத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு இருக்காது. வறட்சியில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது பெரும் சவாலாகும். வறட்சியை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பலர் மாடுகளை விற்று விடுவர். வறட்சியை சமாளிக்கும் வகையில் மூன்று ஆண்டு வரை தட்டுப்பாடு இன்றி கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வழிகாட்டுகிறார் தேனி மாவட்டம் தப்புக்குண்டு விவசாயி மணிகண்டன். இவர் 40 மாடுகளுடன் பால் பண்ணை நடத்துகிறார். தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க தேனி உழவர் பயிற்சி மையத்தை நாடினார்.தொழில் நுட்ப ஆலோசனை பெற்று தற்போது 120 டன் கால்நடை தீவனத்தை 'ஊறுகாய் புல்' ஆக தயாரித்து மண்ணில் புதைத்துள்ளார். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்.உலர வைத்தல்மணிகண்டன் கூறியதாவது: பசுந்தீவனத்தில் ஊறுகாய் புல் (சைலேஜ்) தயாரிக்க முடியும். கோ--4, தீவனச் சோளம், மக்காச் சோளம் ஆகியவற்றில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. அதனை வெட்டி நிழலில் 2 மணிநேரம் உலர்த்தி 20 சதவிகித நீர்ச்சத்து வெளியேறி 65 சதவீத நீர் சத்துள்ள நிலையில் புல் வெட்டும் இயந்திரம் மூலம் இரண்டு, மூன்று துண்டாக வெட்டி கொள்ள வேண்டும். 10 அடி அகலம், இரண்டரை அடி ஆழத்தில் குழி எடுத்து அதில் 'தார்ப்பாய்' விரித்து கொள்ள வேண்டும்.
தயாரிப்புமுறை 100 கிலோ ஊறுகாய் புல் தயாரிக்க 2 சதவிகித மொலாசஸ் அல்லது இனிப்பு சத்து (கருப்பட்டி), 2 சதவிகித கம்பு மாவு, 0.5 சதவிகித தயிர் ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும். பின் வெட்டிய தீவனத்தை குழியில் பரப்பி அதன் மீது கரைசலை தெளிக்க வேண்டும். அடுத்து தீவனத்தை பரப்பி கரைசல் தெளிக்க வேண்டும். தீவனத்தில் உள்ள ஆக்சிஜன் வெளியேறும் வகையில் 'இறுக்கம்' செய்ய வேண்டும். இதேபோல் 
தீவனத்தை அடுக்கி நெருக்கமாக செய்து மேலே தார்ப்பாய் கொண்டு காற்றுப்புக முடியாத வகையில் மூடி மேற்பரப்பில் மண்ணால் மூடிவிட வேண்டும். குறைந்தது மூன்று மாதம் திறக்க கூடாது. அதன்பின் குழியை திறந்து தேவைக்கு ஏற்ப பயன்டுத்தலாம்.120 டன் ஊறுகாய்வறட்சியால் விளைச்சல் இன்றி போகும் நிலையில் உள்ள பசுந்தீவனம் 20 ஏக்கர் 
மொத்தமாக வாங்கினேன். ஒரு குழியில் 15 முதல் 20 டன் என்ற அளவில் 'ஊறுகாய்புல்' தயாரித்து மூடியுள்ளேன். இதுபோன்று 8 குழிகள் உள்ளன. இதில் 120 டன் தீவனம் இருப்பு வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறேன். 3 ஆண்டு வரை பயன்படுத்தலாம். இனிப்பு, கம்புமாவு, தயிர் கலவையால் நியூட்டரின் சத்து நிறைந்த ஊறுகாய் புல்லில் 'புரோ பயோடிக்' எனும் நன்மை செய்யும் நுண்ணுயிர் அதிகரித்து விடும். இதனை உண்ணும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு வராது. 30 கிலோ பசுந்தீவனம் கொடுக்கும் நியூட்ரின் சத்து அதிகரித்து பால் சுரப்பு கூடும், என்றார். தொடர்புக்கு 99431 37658
-வி.ரவி, திண்டுக்கல்

Source : Dinamalar