திறந்தவெளியில், இரண்டடி உயரத்தில் வளரும் புல்லட் ரக மிளகாய்ச் செடிகள், நிழல்வலை குடிலில் எட்டடி உயரம்தொட்டு அதிசயம் செய்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில், உள்ள காய்கனி மகத்துவ மையத்தின் செயல் விளக்கத் திடலில் கொத்து கொத்தாக காய்த்துத் தொங்கும் பச்சை மிளகாய்கள், பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை.
ஒரு சதுர சென்டி மீட்டர் வலைக்குள், 36 சன்னரக துளைகள் இருப்பதால் பூச்சி களுக்கு தடா.
அடுத்தடுத்து இரண்டு கதவுகளும் இதேவலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், வெளியில் இருந்து பூச்சிகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் செடிகள் சிலுசிலுவென பசுமை படர்ந்து பரவசப் படுத்துகின்றன.
இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 36 க்கு 30 மீட்டர் அளவில் 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்த குடிலில் 1,050 புல்லட் ரக மிளகாய் நாற்றுகள் நடப்பட்டன.
பயிருக்கு தெளிக்க வேண்டிய பூச்சிமருந்துகளை தவிர்க்கலாம் என்கிறார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சீனிவாசன். அவர் கூறியது:
தரைப்பகுதியில் பயிர்கள் வளர்க்க வேண்டியபகுதியில், முதலில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் படுகிறது.
அதன் மேல் பிளாஸ்டிக் நிலப்போர்வை, பாய் போல நீண்ட வரிசையில் விரிக்கப்பட்டு, நாற்று நட வேண்டிய இடம் மட்டும் துளையிடப் படுகிறது.
நாற்று வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் கருப்பு நிற களையை நீக்கும் பாய் விரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் நிலப் போர்வையால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. சொட்டு நீர் வழக்கத்தை விட குறைந்தளவே தரப்படுகிறது.
சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 'பாகர்ஸ்' எனப்படும் நுண்நீர் தெளிப்பான் மூலம் பனிப்புகை போன்ற சிறு துகள்களாக தண்ணீர் தெளிக்கப்படுவதால், 4 டிகிரி வெப்ப நிலை வரை குறைக்கப்படுகிறது. ஒரு துளையின் வழியாக ஏழரை லிட்டர் தண்ணீர் மட்டுமே வரும்.
எட்டு மாதங்களை கடந்த நிலையில், இன்னும் மிளகாய்ச் செடிகள் பலன்தந்து கொண்டிருக்கின்றன.
வழக்கமாக திறந்தவெளியில் நடப்படும், இதே ரக மிளகாய்ச் செடிகள், இரண்டடி உயரத்தில் செடி ஒன்றுக்கு ஒன்றே கால் கிலோ மிளகாய் வீதம் எட்டுமாதங்கள் வரை கிடைக்கிறது. ஆனால் நிழல்வலை குடிலில் இந்த மிளகாய்ச் செடிகள் அதிகபட்சமாக, எட்டடி உயரம் வரை வளர்வதோடு நிறைய சிம்புகள்விட்டு அதிகபட்சமாக மூன்றரை கிலோ வரை காய்க்கின்றன. 11 மாதங்கள் வரை தொடர்ந்து பலன்தருகின்றன, என்றார்.
இத்தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் சீனிவாசனை 94434 55477ல் தொடர்பு கொள்ளலாம்.
-எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை
Source : Dinamalar
No comments:
Post a Comment