Friday, July 7, 2017

நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி


dall

தருமபுரி: பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என். ராஜேந்திரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மேலும் அவர்கள் கூறியது: பயிர் வகையிலே துவரை பயிர் மட்டும் பருவம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறி பயிர் செய்தால் கண்டிப்பாக மகசூல் பாதிக்கும். இதனைப் போக்க, புதிய தொழில்நுட்மான நாற்று நடவு துவரை சாகுபடி முறையைப் பின்பற்றி, துவரையில் அதிக மகசூல் பெறலாம். இதற்கான பருவம் ஆடிப் பட்டம் சிறந்தது.
நாற்றங்கால் தயாரித்தல்: துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரிக்கோடேர்மாவிரிடி போன்றவற்றில் ஏதாவது ஓன்றில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 2?? மைக்ரான் உள்ள 6''-க்கு 4'' அளவுள்ள நெகிழிப் பைகளில் நிரப்பி விதைக்கப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க பைகளைச் சுற்றி 4 துளைகள் போட வேண்டும். பின்னர், விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30 - 35 நாள்கள் பாரமரிக்க வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் முன் இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து, கடினப்படுத்தி பின்பு நடவு செய்தல் நல்லது.
நடவு செய்தல்: தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை, 5-க்கு 3 அடி இடைவெளிலும் ( 2904 பயிர் / ஏக்கர்), காராமணி, உளுந்து போன்ற ஊடுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6-க்கு 3 அடி இடைவெளிலும் (2420 பயிர் / ஏக்கர் ) குழிகள் எடுக்க வேண்டும். நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன், குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு யூரியா 27.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 156 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ இட வேண்டும். இறவைப் பயிர்களுக்கு யூரியா 55 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 312 கிலோ, பொட்டாஷ் 42 கிலோ ஆகிய உரங்களை நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் இட வேண்டும். மேலும், துத்தநாக சல்பேட் 10 கிலோ செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும்.
நுனி கிள்ளுதல்: நடவு செய்த 20-25 நாள்கள் கழித்து அல்லது விதை விதைத்த 50-55 நாள்கள் கழித்து 5 அல்லது 6 செ.மீ அளவுக்கு நுனிக் குருத்தைக் கிள்ளி விடுவதால், பக்க கிளைகள் அதிகரிக்கும். இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கும்.
பயறு வொண்டர் தெளித்தல் : பூ பூக்கத் தொடங்கும் பருவத்தில், பயறு வொண்டரை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் தண்ணீரில் கலந்து இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் பூ உதிர்தலைத் தடுக்கலாம். இதனால் அதிக மகசூல் பெறலாம். மேலும், வறட்சியைத் தாங்கி வளரவும் வழிவகை செய்கிறது.
நாற்று நடவு சாகுபடியின் நன்மைகள்: நடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். துவரை நடவு அதிக ஆழத்தில் செய்யப்படுவதால், நன்கு வேர் வளர்ச்சி காணப்பட்டு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறை செய்யப்படுவதால், பயிர் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் செய்ய முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. இதனால், குறைந்த அளவுக்கு கிடைக்கும் புதிய ரக விதைகளை அதிக பரப்பளவு சாகுபடிக்கு கொண்டு வர முடியும். நுனி கிள்ளுவதால் அதிக பக்க கிளைகள் உருவாகி, அதிக விளைச்சல் கிடைக்கிறது.
எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்தப் புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
 Source : Dinamani

No comments:

Post a Comment