சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, 'கறுப்புகாவனி' மற்றும் ஆர்.என்.ஆர்., நெல் ரகங்களை இயற்கை உரங்களை போட்டு, வளர்த்து அறுவடை செய்து விவசாயி அசத்தி உள்ளார்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் நெல் ரகங்களை பற்றி தெரிந்து கொண்டு, அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்.
பெருமிதம்
தற்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படும், 'கறுப்புகாவனி' நெல் ரகத்தினை பயிரிட்டு அசத்தியுள்ளார்.ஐந்து மாதங்கள் பருவ காலம் கொண்ட இந்த ரகத்தினை, தன் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, 37 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார்.
கறுப்பு நிறத்தில் உள்ள இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் வாங்கி செல்வதாகவும், இதில் சர்க்கரை சத்து முற்றிலும் இல்லை எனவும் விவசாயி பெருமிதத்துடன் கூறுகிறார்.
அதேபோன்று, தோட்டக்கலை துறை மூலம், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு, விவசாயம் குறித்து பயிற்சிக்கு சென்றவர் அங்கிருந்து, ஆர்.என்.ஆர்., ரக நெல் விதையை வாங்கி வந்து, விளைவித்து உள்ளார்.இதுவும் சர்க்கரை சத்து குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாகும். தற்போது இந்த வகை நெல் ரகத்தினை தன், 3 ஏக்கர் நிலத்தில்
மீண்டும் பயிரிட்டு உள்ளார்.
அமிர்த கரைசல்
பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை தெளிக்காமல் தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் என, இயற்கை உரங்களை போட்டு விவசாயம் செய்கிறார்.பயிர் வளர்ச்சிக்கு மீன் அமினோ அமிலம், பயிரின் ஊட்டசத்திற்கு பழங்காடி, நோய் தாக்குதலில் இருந்து காக்க
அரிசி கஞ்சி கரைசல், தழை சத்திற்கு அமிர்த கரைசல் என, பல்வேறு வகையான இயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்.
இவரிடம் சர்க்கரை சத்து குறைவாக உள்ள அரிசி இருப்பதை அறிந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாங்கி செல்கின்றனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment