Monday, December 11, 2017

பயிர்களின் நோயை கண்டறிய உதவும், 'செயலி' கோவை வேளாண் பல்கலை அறிமுகம்

கோவை:விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, 'வேளாண் வல்லுனர் அமைப்பு' என்ற மொபைல் போன் செயலியை தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் வேளாண் பயிர்கள், கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்த முழுத் தகவல்களை விவசாயிகள் தங்களின் மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண் பல்கலை இ - விரிவாக்க மைய விஞ்ஞானிகள், இந்த செயலிகளை உருவாக்கியுள்ளனர்.
இத்திட்டத்தின் முதன்மை வேளாண் விஞ்ஞானிகார்த்திகேயன் கூறியதாவது:
'வேளாண் வல்லுனர் அமைப்பு'என்ற இணையப் பக்கத்தை வேளாண் பல்கலை இணையதளத்தில் துவக்கியுள்ளோம். தற்போது அதற்கான மொபைல் போன் செயலியையும் அறிமுகம் செய்துள்ளோம்.
வேளாண் பயிர்களை, பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குகின்றன. அது என்ன வகையான நோய், எதனால் வருகிறது என்பது குறித்து, அனைத்து விவசாயிகளாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை.
வேளாண் ஆய்வகத்துக்கு, பாதிப்படைந்த பயிரைக் கொண்டு வந்து சோதனை செய்த பிறகுதான்பாதிப்புக்கான காரணத்தை அறிகின்றனர். இதனால் கால விரையம் ஏற்படுகிறது.
கால விரையத்தையும், பொருள் செலவையும் தவிர்க்க இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளோம். விவசாயிகள் தங்களது மொபைல் போன்களில் இந்த செயலியை பயன்படுத்தி பயிர் பாதிப்பை அறிந்து கொள்ள முடியும்.
அதற்காக, பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான பிரச்னைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்த அறிகுறிகளை புகைப்படங்கள் மற்றும் படக்காட்சிகள் மூலம், இதில் விளக்கியுள்ளோம்.
உதாரணமாக, ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல் பயிரில் நோய் தாக்குதலை பார்க்கிறார் என்றால், உடனே தனது ஆன்ராய்டு மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வேளாண் பல்கலை உருவாக்கிய நெல் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். நெல் பிரிவில் உள்ள நெல் இமேஜ்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் நோய் தாக்குதலுக்கு உண்டான பயிருடன் பொருந்தும் படத்தை தேர்ந்து, அதோடு ஒப்பிட்டு பார்த்தால், அது எந்த வகையான நோய் என்பது தெரிந்து விடும்.
இந்த செயலியில், பயிர் ஆலோசகர், பயிர் மருத்துவர், தகவலகம் என, மூன்று பிரிவுகள் உள்ளன. அதில் பயிர் மருத்துவர் பிரிவை தேர்வு செய்தால், பயிரை தாக்கிய நோயின் விபரம், காரணிகள் என்ன, தீர்வு என்ன போன்ற முழு விளக்களையும் அறியலாம். மேலும், 'பயிர் ஆலோசகர், தகவலகம்' பிரிவுகளை சொடுக்கி தேவையான தகவல்களை பெறலாம்.
முதல் கட்டமாக நெல், வாழை, கரும்பு, தென்னை, சிறுதானியங்கள் மற்றும் பசு மாடு, ஆகிய ஆறு பிரிவுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இந்த செயலியில் விளக்கம் பெற வசதி செய்யப்படும்.
இவ்வாறு, கார்த்திகேயன் கூறினார்.
வேளாண் இ - விரிவாக்க பயிற்சித்துறை தலைவர் வெங்கட்பிரபு கூறுகையில், ''2013ம் ஆண்டு, கம்யூட்டரில் தெரிந்து கொள்ளும் வகையில், இணையதள பக்கத்தை உருவாக்கி இருந்தோம். கம்யூட்டரை அனைத்து விவசாயிகளாலும் பயன்படுத்த முடியவில்லை என்பதால் திட்டம் பலனளிக்கவில்லை. இப்போது ஆன்ராய்டு மொபைல் போனில் பயன்படுத்து செயலியை உருவாக்கி இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்து விவசாயிகள் அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம் பெற முடியும்'' என்றார்.
கூகுள் பிளே ஸ்டோரில், tnau expert system என, 'டைப்' செய்து தங்களுக்குத் தேவையான 
செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

Source : Dinamalar

No comments:

Post a Comment