Monday, July 10, 2017

தேயிலையில் மருந்து தயாரிக்கும் திட்டம்


நீலகிரி தேயிலையில் இருந்து மருந்து தயாரிக்க கைகாட்டி, மகாலிங்கா கூட்டுறவு ஆலைகளில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி பிரிவு துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தொழில் வணிகத் துறையின் கீழ் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தினசரி தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. 
பெரும்பாலான தொழிற்சாலைகளில் சி.டி.சி ரக தேயிலைதூள் உற்பத்தியும் ஒரு சில தொழிற்சாலைகளில் சி.டி.சி ரகத்துடன் ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூளும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை தூளுடன் பசுந்தேயிலையில் மருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து இண்ட்கோ சர்வ் சேர்மன் சிவக்குமார் கூறியதாவது: முதற்கட்டமாக கைகாட்டி மற்றும் மகாலிங்கா தேயிலை தொழிற்சாலைகளில் மருந்து தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு துவக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் விரைவில் இத்தொழிற்சாலைகளில் மதிப்பு கூட்டப்பட்ட மருந்து தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு துவக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்ற கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் படிப்படியாக மருந்து உற்பத்தி செய்யப்படும் என சிவக்குமார் தெரிவித்தார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment