Tuesday, July 18, 2017

விவசாயத்துக்குத் திரும்புகிறது மூன்றாம் தலைமுறை: வேளாண் பல்கலை. துணைவேந்தர் பெருமிதம்

farmer1

தமிழகத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும், வேளாண் தொழிலையே தெரிந்திருக்காத புதியவர்களும் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2017 என்ற பெயரிலான 17- ஆவது வேளாண் வணிகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியின் தொடக்க விழாவில் துணைவேந்தர் கு.ராமசாமி பேசியதாவது:
விவசாயம் லாபம் ஈட்டும் தொழிலாகவும், நமது அடிப்படையான தொழிலாகவும் இருப்பதை உணர்ந்த மூன்றாவது தலைமுறையினர் தற்போது விவசாயத்துக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். அவர்களுடன், விவசாயம் பற்றித் தெரியாத மற்றொரு தலைமுறையும் ஆர்வத்துடன் வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஒரு காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 2,500 இடங்களுக்கு வெறும் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது 2,800 இடங்களுக்கு 53 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. இளைய தலைமுறையினர் விழித்துக் கொண்டிருப்பதையே இவை காட்டுகின்றன என்றார் அவர்.
உணவு உற்பத்தியில் சாதிக்கும் தமிழகம்: நிகழ்ச்சியில் வேளாண் வணிக ஆணையர் சுன்னோங்கம் ஜடாக் சிரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, அண்மைக்கால விவசாயம் காலநிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை கிடைக்காதது போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு தமிழக விவசாயிகள் சாதித்து வருகின்றனர். 2010- 11- ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 43 சதவீதம் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1.13 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இறைச்சிக்கும் சான்றிதழ்: கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.திலகர் பேசும்போது, உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதை அறிந்து கொண்டால் அதிக லாபம் ஈட்ட முடியும்.
Source : Dinamani

No comments:

Post a Comment