Friday, September 16, 2016

'இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்'


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக இயற்கை வேளாண்மையை ஆர்வத்துடன் செய்துவரும் நிலையில், இந்த பாரம்பரிய முறையைப் பின்பற்றும் வகையில் அரசு ஊக்கமளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 வேளாண்மையில் பசுமைப் புரட்சி மூலம் உணவுப் பொருள்களின் மகசூல் பலமடங்காக உயர்ந்தன. இதனால் நாட்டில் பசி, பட்டினி போக்கப்பட்டது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டியதால், விளைநிலத்தின் தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரித்துள்ளது.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மையைப் பின்பற்றி சாகுபடி செய்து வருகின்றனர்.
 பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை வேளாண்மையை விவசாயிகள் ஆர்வத்துடன் பின்பற்றி வருவதைக் காண முடிகிறது. 
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,80,284 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் நெல், கேழ்வரகு, துவரை, நிலக்கடலை, கொள்ளு போன்ற பயிர்களும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் சராசரியாக நெல் பயிர் 26,200 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறு தானியப் பயிர்கள் 62,100 ஹெக்டேரிலும், பயறு வகைப் பயிர்கள் 59,300 ஹெக்டேரிலும், நிலக்கடலை 17,200 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
 பாராம்பரிய முறை:
 நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும் என்பது இயற்கை வேளாண்மையின் கோட்பாடுகளில் ஒன்று. அதன்படி, விவசாயிகள் நெல் நாற்று நடுவதற்கு முன் விளைநிலத்தில் அடியுரமாக வேம்பு, ஆமணக்கு போன்ற மரம், செடி ஆகியவற்றின் இலைகளை மக்கச் செய்கின்றனர். சிலர், ஆடு, மாடு, வாத்துக்கள் ஆகியவற்றை விளைநிலத்தில் மந்தை அடைத்தல் மூலம் மேயவிட்டு, அதன் கழிவுகளை உரமாக பயன்படுத்தும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
 பாரம்பரிய முறையில் சாகுபடி செய்யும் அவதானப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (45) கூறியது, தற்போதைய நவீன காலத்தில் கால்நடை மேய்ச்சல் தொழில் செய்யும் கிதாரிகள் முற்றிலும் குறைந்துவிட்டதால், விவசாயிகள் தாங்களே கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் விளைநிலங்களில் மந்தைகளை அடைக்கும் முறையை பின்பற்றி வருகிறோம். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்குதல் குறைகிறது என்றார். 
 வேப்பனஅள்ளி அருகே உள்ள நேரலகிரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலரும், இயற்கை வேளாண் ஆர்வலருமான அஸ்வத் நாராயணன் (78) தெரிவித்தது: தனது அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு எனது மாந்தோப்பில் இயற்கை வேளாண் முறையில் மா மரங்களைப் பராமரித்து வருகிறேன். இதனால், தோட்டத்தில் அறுவடை செய்யப்படும் காய்கள், பழங்கள் தரமானதாகவும், பூச்சித் தாக்குதல் இல்லாததாகவும் உள்ளன. இதனால், என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்து சுற்றியுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனவே, விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விழிப்புணர்வும், ஊக்கமும் அரசு அளிக்க வேண்டும் என்றார்.
 கிருஷ்ணகிரி அருகே கூட்டாக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறும்போது, மண் மலட்டுத்தன்மை அடைவதை இயற்கை வேளாண்மை மூலம் தடுக்க முடியும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் சிறுநீரைக் கொண்டு பூச்சிக்கொல்லி தெளிப்பானாகப் பயன்படுத்தும் முறையை ஊக்கப்படுத்த வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் குறைவாக உள்ளது என வேதனைப்பட்டனர்.
 பரம்பரை இயற்கை வேளாண்மைத் திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரம்பரை இயற்கை வேளாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.
 நிகழாண்டில் தளி, மத்தூர், ஊத்தங்கரை, கெலமங்கலம் ஆகிய வட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுக்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சியும், நிதியும் அளித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இயற்கை முறை வேளாண்மை தொழில்நுட்பத்தை விவசாயிகள் தங்களது குடும்ப அளவிலேயே பயன்படுத்தி வரும் நிலையில், அந்த தொழில் நுட்பத்தைக் கைவிடாமல் மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் அரசு அதிக ஊக்கமும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment