Monday, September 26, 2016

தாய்லாந்து கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்

கொய்யா பழத்தில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இப்பழம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்ண உகந்த பழம். 

தாய்லாந்து ரகம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் மகசூல் அதிகம். ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். விதை அளவு குறைவு. சதைப்பற்று அதிகம். பழத்தில் அளவும் பெரியது (ஒரு கிலோ வரை இருக்கும்). பேரி மற்றும் ஆப்பிள் போன்று கடித்து சாப்பிட மிருதுவாக சுவையாக இருக்கும். அதிக நாட்கள் அறுவடைக்கு பின் வைத்தும் பயன்படுத்தலாம்.

நடவு முறை: 10க்கு 10, 12க்கு 10, 12க்கு 12 மற்றும் 16க்கு 8 ஆகிய இடைவெளிகளில் நடவு செய்யலாம். ஒட்டு கன்றுகளை 2க்கு 2 என்ற அளவுள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும். குழிகளில் தொழு உரம் மற்றும் மண் 1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும். பின் ஒட்டு நாற்றுகளை நட்டு சிறு மூங்கில் குச்சிகளை அதற்கு ஆதரவாக நட வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் குழி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 2 - 3 லிட்டர் நீர் விட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். செடி நேராக ஒன்று அல்லது இரண்டு கிளைகள் விட்டு பக்க கிளைகளை ஒடிக்க வேண்டும்.

உரமிடும் முறை: ஆண்டுக்கு இருமுறை நன்கு மக்கிய உரம் செடிக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும். மேலும் மண்புழு உரம் இடுதல் நலம். உர உபயோகத்தை அதிகப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். மேலும் நோய்களில் இருந்து பாதுகாக்க சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா ஆகிய உயிரியல் பாதுகாப்பு மருந்துகளை ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதம் இட வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு செடியில் வரும் பூக்கள் மற்றும் காய்களை அகற்ற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பின் காய்க்க அனுமதிக்கலாம்.

ஏக்கருக்கு 10 டன்: காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்தல் அவசியம். ஒவ்வொரு காய்களுக்கும் பாலிதீன் கவர்களை போடுவதன் மூலம் தரமான காய்களை அறுவடை செய்து அதிக விலைக்கு விற்கலாம். பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்ச காவியம் மற்றும் வேம்பு பூச்சி மருந்துகளை மாதம்தோறும் தெளிக்க வேண்டும். களைகள் இல்லாமல் இருக்க சிறு டிராக்டர் கொண்டு உழ வேண்டும். நுாற்புழு தாக்குதல் இருந்தால் மெரிகோல்ட் என்னும் செண்டுமல்லி செடிகளை கொய்யா செடிகளின் அடிப்பகுதியில் வளர்க்க வேண்டும். இரண்டாவது ஆண்டிற்கு பின் ஏக்கருக்கு எட்டு முதல் பத்து டன் மகசூல் எடுக்கலாம். தொடர்புக்கு கொய்யா விவசாயி மனோகரனின் 94425 16641ல் பேசலாம்.

டி.யுவராஜ், வேளாண் பொறியாளர்,
உடுமலை.

கொய்யா பழத்தில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. 

Source : Dinamalar

No comments:

Post a Comment