Monday, September 26, 2016

இயற்கை சாகுபடியில் 7 அடி உயரம் வளர்ந்த புடலங்காய் :



tree
பெரம்பலூர் அருகே, இயற்கை சாகுபடி முறையில் சுமார் 7 அடி உயரமுள்ள (226 செ.மீட்டர்) புடலங்காய் சாகுபடி செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் க.விக்ரம்.

பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (65). விவசாயி. இவரது மகன் விக்ரம் (37). எம்.எஸ்சி, எம்.ஏ படித்துள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது வேலையை விட்டு, சொந்த கிராமத்துக்கு வந்த விக்ரம் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இயற்கை சாகுபடியில் ஆர்வமுள்ள விக்ரம் தங்களின் 7 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் சாகுபடி செய்ய முயற்சித்து வருகிறார். அதன்படி, தனது விவசாய நிலத்துக்கு வாகை இயற்கை பண்ணை என்று பெயரிட்டு கீரை வகைகள், நெல், கத்திரி, பந்தல் சாகுபடியில் பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

தற்போது, அவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய் 226 செ.மீட்டர் நீளத்துக்கு வளர்ந்துள்ளது. மேலும், அதன் வளர்ச்சி உள்ளதால், அதனருகே குழி தோண்டி அதனுள் புடலங்காயை வளரச்செய்துள்ளார்.

இதுகுறித்து விக்ரமின் தந்தை கண்ணன் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக எனது மகனின் முயற்சியால் இயற்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய்களில் 5-க்கும் மேற்பட்ட புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளன. 2010-ஆம் ஆண்டு எங்கள் தோட்டத்தில் வளர்ந்த 188 செ.மீட்டர் நீளமுள்ள புடலங்காயும், 2013-ஆம் ஆண்டில் வளர்ந்த 252 செ.மீ நீளமுள்ள புடலங்காயும் மிகப்பெரிய புடலங்காய் என கருதப்பட்டது. இந்நிலையில், தற்போது, வளர்ந்துள்ள இந்த புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது என்றார் அவர்.
Source : Dinamani

No comments:

Post a Comment