Monday, September 26, 2016

இயற்கை சாகுபடியில் 7 அடி உயரம் வளர்ந்த புடலங்காய் :



tree
பெரம்பலூர் அருகே, இயற்கை சாகுபடி முறையில் சுமார் 7 அடி உயரமுள்ள (226 செ.மீட்டர்) புடலங்காய் சாகுபடி செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் க.விக்ரம்.

பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (65). விவசாயி. இவரது மகன் விக்ரம் (37). எம்.எஸ்சி, எம்.ஏ படித்துள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது வேலையை விட்டு, சொந்த கிராமத்துக்கு வந்த விக்ரம் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இயற்கை சாகுபடியில் ஆர்வமுள்ள விக்ரம் தங்களின் 7 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் சாகுபடி செய்ய முயற்சித்து வருகிறார். அதன்படி, தனது விவசாய நிலத்துக்கு வாகை இயற்கை பண்ணை என்று பெயரிட்டு கீரை வகைகள், நெல், கத்திரி, பந்தல் சாகுபடியில் பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

தற்போது, அவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய் 226 செ.மீட்டர் நீளத்துக்கு வளர்ந்துள்ளது. மேலும், அதன் வளர்ச்சி உள்ளதால், அதனருகே குழி தோண்டி அதனுள் புடலங்காயை வளரச்செய்துள்ளார்.

இதுகுறித்து விக்ரமின் தந்தை கண்ணன் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக எனது மகனின் முயற்சியால் இயற்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய்களில் 5-க்கும் மேற்பட்ட புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளன. 2010-ஆம் ஆண்டு எங்கள் தோட்டத்தில் வளர்ந்த 188 செ.மீட்டர் நீளமுள்ள புடலங்காயும், 2013-ஆம் ஆண்டில் வளர்ந்த 252 செ.மீ நீளமுள்ள புடலங்காயும் மிகப்பெரிய புடலங்காய் என கருதப்பட்டது. இந்நிலையில், தற்போது, வளர்ந்துள்ள இந்த புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது என்றார் அவர்.
Source : Dinamani

தரமான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் துவரை உற்பத்தியை அதிகரிக்க முடியும் :



thuvarai
தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி தரமான துவரை விதைகளை உற்பத்தி செய்தால், விளைச்சலை அதிகப்படுத்தி விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும் என, திண்டுக்கல் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் பெ.விஜயராணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது: ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு, 2016 ஆம் ஆண்டை உலக பயறு ஆண்டாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலும் பயறு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது. துவரை சாகுபடி செய்வதற்கான நிலம் தேர்ந்தெடுத்தல், உரமிடுதல், கலவன் அகற்றுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினால், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

  தரமான விதைகள் என்பது, தன்னுடைய இனத் தூய்மையில் சிறிதும் குன்றாமல், களை விதை, பிற ரக விதை, நோய் தாக்குதல் விதை இல்லாமல் இருக்கவேண்டும். மேலும், தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்பு திறன் அதிகமாகவும் இருக்கும். இதனால், தரமான செடிகளின் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

பயறு வகை விதைப் பண்ணைகளுக்கு மானியம்: பயறு வகை விதைப் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில், உற்பத்தி மற்றும் விநியோக மானியம் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், அரசுக்கு வழங்க வேண்டுமெனில், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

தாய்லாந்து கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்

கொய்யா பழத்தில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இப்பழம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்ண உகந்த பழம். 

தாய்லாந்து ரகம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் மகசூல் அதிகம். ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். விதை அளவு குறைவு. சதைப்பற்று அதிகம். பழத்தில் அளவும் பெரியது (ஒரு கிலோ வரை இருக்கும்). பேரி மற்றும் ஆப்பிள் போன்று கடித்து சாப்பிட மிருதுவாக சுவையாக இருக்கும். அதிக நாட்கள் அறுவடைக்கு பின் வைத்தும் பயன்படுத்தலாம்.

நடவு முறை: 10க்கு 10, 12க்கு 10, 12க்கு 12 மற்றும் 16க்கு 8 ஆகிய இடைவெளிகளில் நடவு செய்யலாம். ஒட்டு கன்றுகளை 2க்கு 2 என்ற அளவுள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும். குழிகளில் தொழு உரம் மற்றும் மண் 1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும். பின் ஒட்டு நாற்றுகளை நட்டு சிறு மூங்கில் குச்சிகளை அதற்கு ஆதரவாக நட வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் குழி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 2 - 3 லிட்டர் நீர் விட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். செடி நேராக ஒன்று அல்லது இரண்டு கிளைகள் விட்டு பக்க கிளைகளை ஒடிக்க வேண்டும்.

உரமிடும் முறை: ஆண்டுக்கு இருமுறை நன்கு மக்கிய உரம் செடிக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும். மேலும் மண்புழு உரம் இடுதல் நலம். உர உபயோகத்தை அதிகப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். மேலும் நோய்களில் இருந்து பாதுகாக்க சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா ஆகிய உயிரியல் பாதுகாப்பு மருந்துகளை ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதம் இட வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு செடியில் வரும் பூக்கள் மற்றும் காய்களை அகற்ற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பின் காய்க்க அனுமதிக்கலாம்.

ஏக்கருக்கு 10 டன்: காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்தல் அவசியம். ஒவ்வொரு காய்களுக்கும் பாலிதீன் கவர்களை போடுவதன் மூலம் தரமான காய்களை அறுவடை செய்து அதிக விலைக்கு விற்கலாம். பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்ச காவியம் மற்றும் வேம்பு பூச்சி மருந்துகளை மாதம்தோறும் தெளிக்க வேண்டும். களைகள் இல்லாமல் இருக்க சிறு டிராக்டர் கொண்டு உழ வேண்டும். நுாற்புழு தாக்குதல் இருந்தால் மெரிகோல்ட் என்னும் செண்டுமல்லி செடிகளை கொய்யா செடிகளின் அடிப்பகுதியில் வளர்க்க வேண்டும். இரண்டாவது ஆண்டிற்கு பின் ஏக்கருக்கு எட்டு முதல் பத்து டன் மகசூல் எடுக்கலாம். தொடர்புக்கு கொய்யா விவசாயி மனோகரனின் 94425 16641ல் பேசலாம்.

டி.யுவராஜ், வேளாண் பொறியாளர்,
உடுமலை.

கொய்யா பழத்தில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. 

Source : Dinamalar

பசுமைக்குடில் வௌ்ளரி சாகுபடியில் பலமடங்கு லாபம்

வெள்ளரி சாகுபடியில் திறந்த வயல்வெளியில் இரண்டு ஏக்கரில் கிடைக்கும் மகசூலை விட அரை ஏக்கரில் பசுமைக்குடில் அமைத்து மூன்று மடங்கு கூடுதல் மகசூல் ஈட்டலாம் என்கிறார், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிள்ளையார்நத்தம் விவசாயி கோவிந்தராஜ்.
விவசாயம் மீதான ஈர்ப்பால் சொந்த ஊரில் வெள்ளரி, பாகற்காய் போன்ற காய்கறி பயிர்களை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். தோட்டக்கலை துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சென்ட் நிலத்தில் பசுமைக்குடில் அமைத்துள்ளார். இதற்காக அவருக்கு 24 லட்சத்து 68 ஆயிரத்து 250 ரூபாய் செலவானது. மானியமாக 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தோட்டக்கலைத்துறை வழங்கியது.கோவிந்தராஜ் கூறியதாவது: மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்ய முதலில் தயக்கமாக இருந்தது. இதனால் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் கலைச்செல்வனுடன் ஆலோசித்து பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி பணியில் இறங்கினேன். 50 சென்ட் நிலத்தில் ஐந்து லட்சம் ரூபாயில் பசுமைக்குடில் அமைத்தேன். கடந்த டிசம்பரில் வெள்ளரி விதை வாங்கி நடவு செய்தேன். பின் அதை பாத்தி கட்டி பசுமைக்குடிலில் வளர்த்தேன். 28 நாட்களில் பூக்கத் துவங்கியது. 43 வது நாளிலிருந்து காய்களை பறிக்க துவங்கினோம். இயற்கை உரம் பயன் படுத்தினேன். ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய் வரை விலை போகிறது. உற்பத்தி செலவு கிலோவிற்கு 12 ரூபாய் ஆகிறது.'ஆப் சீசன்' காலங்களிலும் அதிகபட்சமாக கிலோ 60 ரூபாய் வரை கிடைக்கும். இதற்கு முன்பு ஒரு சாகுபடி முடித்து உள்ளோம். இதில் எங்களுக்கு 24.7 டன் மகசூல் கிடைத்தது. இது சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 
கிடைக்க வேண்டியதாகும். திறந்த வயல்வெளியில் கிடைக்கும் மகசூலை காட்டிலும் பசுமைக்குடில் மூலம் நான்கு மடங்கு மகசூல் ஈட்டலாம். 
பசுமைக்குடிலில் கட்டுப்பாடான சூழல் நிலவுவதால், பயிர் வளர்ப்பில் இடர்பாடுகள் இல்லை. பராமரிப்பு ஆட்கள் செலவும் குறைவு. தற்போது என் தோட்டத்தில் ஏழு பேர் பணிபுரிகின்றனர். ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டிற்கு வெள்ளரி அனுப்பினேன். தற்போது உள்ளூர் தேவைக்கு சரியாக இருக்கிறது. தரம் சீராக கிடைப்பதால் சந்தைப் படுத்துவது எளிதாக இருக்கிறது. முறையாக நடவு செய்து பராமரித்து வளர்த்தால் உற்பத்தி செலவு நீங்கலாக ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். நான் சென்னையில் பணிபுரிந்தாலும் வாட்ஸ்ஆப் மூலம் தோட்ட பணியாளர்களை தொடர்பு கொண்டு விவசாயம் செய்கிறேன், என்றார். 
தொடர்புக்கு: 96771 24505.
- எம்.ரமேஷ்பாபு, மதுரை.

Source : Dinamalar

Thursday, September 22, 2016

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம்: வேளாண்மைத் துறை

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து மிகவும் அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 விவசாயத்தில் மகசூலைப் பெருக்குவதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தினைவிட, ரசாயன உரங்களின் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது.
 பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இன்றியமையாதவை ஆகும்.
 தழைச்சத்து பயிருக்கு வளர்ச்சியையும், மணிச்சத்து வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் மற்றும் மணிகள் உருவாகவும், சாம்பல் சத்து பயிரின் தண்டு உறுதி, வறட்சியினை தாங்கும் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையையும் வழங்குகின்றன. தற்போது வீரிய ஒட்டு உயர் விளைச்சல் ரகங்கள் அதிகளவில் உபயோகத்தில் உள்ள சூழலில் ரசாயன உரங்களின் தேவையும் அதிகமாக உள்ளது. தழைச் சத்துகளை மட்டும் அதிகளவில் உபயோகிப்பதனால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கின்றது.
 இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ரசாயன உரங்களை விட விலை குறைவாக உள்ளதால், யூரியா உரம் விவசாயிகளால் பயிரின் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பது வழக்கத்தில் உள்ளது.
 மேலும் மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவல்ல ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதும் குறைவாக உள்ளது. பயிருக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உரங்கள் சமச்சீர் அளவில் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு சத்துகளை மட்டும் வழங்கும் உரங்களை இடுவதால் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிரின் ஆரோக்கியம் கெடுகிறது.
 நெற்பயிரின் சீரான வளர்ச்சிக்கும், பூச்சி, நோய்க்கு எதிர்ப்பு தன்மையினை அளித்தும், வறட்சியினை தாங்கும் சக்தியினை அளித்தும், பதர் ஆகாமல் நிறைந்த நெல்மணிகள் உருவாகவும் சாம்பல் சத்து கொண்ட பொட்டாஷ் அடியுரமாகவும், மேலுரமாக யூரியாவுடன் பொட்டாஷ் கலந்தும் இடவேண்டியது மிகவும் அவசியம்.
 விவசாயிகள் பயிருக்குத் தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை தரவல்ல நேரடி உரங்களை சிபாரிசுப்படி இடவேண்டும். இல்லாவிடில் 3 சத்துகளையும் கொண்ட கூட்டு உரங்களை உபயோகிக்க வேண்டும். முன்னணி உர நிறுவனங்களின் தயாரிப்பான 15:15:15, 16:16:16 ஆகிய கூட்டு உரங்களை விவசாயிகள் பயிருக்கு இட வேண்டும்.
 இதன் ஒவ்வொரு குருணையிலும் 3 விதமான சத்துக்களும் சீரான அளவில் இருப்பதால் பயிருக்கு தேவையான சத்துகள் குறைபாடு இல்லாமல் கிடைக்கிறது.
 மேலும், ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதானது, மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், பயிர் தேவையின் அடிப்படையிலும் அமைய வேண்டும். எனவே விவசாயிகள் தழை, மணி, சாம்பல் ஆகிய 3 சத்துகளும் கொண்ட ரசாயன உரங்களை அடியுரமாக இட்டு அதிக மகசூல் பெறலாம் என அதில்
 தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

பப்பாளி சாகுபடியில் விவசாயிகள்... ஆர்வம் மூன்று ஆண்டிற்கு பலன் கிடைக்கிறது


பெரியகுளம் தாலுகா பகுதியில் அதிக பரப்பில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டிற்கு பலன் கிடைப்பதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தாலுகாவில் விவசாயிகள் குறுகிய கால காய்கறி பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பயிர்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் பப்பாளி சாகுபடி செய்வது லாபகரமான தொழில் என்பதால் இதன் பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி நாற்றுக்கு மானியம் தரப்படுகிறது. நடவு செய்த 3 மாதங்களில் இருந்து பலன் அறுவடை செய்யலாம். வைரஸ் போன்ற நோய் தாக்குதல் இல்லையெனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக கோடையான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பெங்களூரு மற்றும் கேரள வியாபாரிகள் நேரடியாக வயல்வெளிகளுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ ரூ. 6 முதல் ரூ. பத்து வரை விற்கப்படுகிறது.
சில்வார்பட்டி விவசாயி முத்துக்காமாட்சி கூறுகையில்,“விவசாய விளை பொருட்களை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது.ஆனால் பப்பாளியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கு வருகின்றனர். நோய் தாக்குதல் இன்றி முறையாக பராமரித்தால் மூன்று ஆண்டுகள் இதனால் பலன் கிடைக்கிறது. பொருளாதார இழப்பும் தவிர்க்கப்படுகிறது,”என்றார் இவ்வாறு கூறினார்.


Source : Dinamalar

Monday, September 19, 2016

கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி வேளாண் உதவி இயக்குனர் தகவல்

கூடுதல் மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை மேற்கொள்ள வேண்டும் என பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுருளியப்பன் ஆலோசனை வழங்கி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:   தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி என்ற முறையாகும். இச்சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான சான்று பெற்ற வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். 1 ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதைகளை பயன்படுத்த வேண்டும். நாற்றாங்காலை 1 ஏக்கருக்கு 40 சதுரமீட்டர் என்ற அளவில் மண்மக்கிய தொழுஉரம் 9:1 என்ற வீதம் பரப்பி விதைக்க வேண்டும். 14 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளிக்கு மார்க்கர் கருவிகளை பயன்படுத்த வேண்டும். 22.5 சென்டிமீட்டர் * 22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துக்கு 1 நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும். 

    நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். 2.5 சென்டிமீட்டருக்கு அதிகமாக நீர் நிறுத்தக்கூடாது. கோனோவீடர் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல், 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா ஏக்கருக்கு தலா 7 பாக்கெட் பயன்படுத்த வேண்டும். பச்சை இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம். இவ்வாறு தெரிவித்தார். 

Source : Dinakaran

கம்பு பயிரிட்டால் காசு பார்க்கலாம் வேளாண்துறை ஆலோசனை

பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது விவசாய பணிகள் துவங்கி உள்ளன. தற்போது இறவை பாசன வசதி உள்ள விவசாயிகள் கம்பு பயிரிடுவது ஏற்ற தருணமாகும். கோ 7, கோ (சியு) 9, ஜசிஎம்வி 221, ராஜ் 171, எக்ஸ் 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை தேவைப்படும். நாற்றாங்கால் எக்டேருக்கு 7.5 சென்ட் அளவிற்கு இருக்க வேண்டும். 3*1.5 மீட்டர் அளவு கொண்ட 6 படுக்கைகள் 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுக்கையை சுற்றி அமைக்க வேண்டும். 

எக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்க நல்ல தண்ணீர் கொண்டு 3, 4 முறை விதைகளை கழுவி பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் தாக்காமல் இருக்க குளோரிபைபாஸ் 36 டபிள்யூ.எஸ்.வி அல்லது பாசலோன் 35 இசி 4 மில்லியுடன்  5 கிராம் பசை இவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் தாக்காமல் இருக்க மெட்டலாக்சில் 6 கிராம் உடன் 5 மில்லி தண்ணீர் கலந்து 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.

விரல்களால் 1 சென்டிமீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, 1 படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூட வேண்டும். மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளிலிருந்து பாதுகாக்கலாம். நாற்றுக்களை தண்டு ஈயிலிருந்து காப்பதற்கு கார்போபியூரான் 3ஜி 600 கிராம் கலந்து தூவி விட வேண்டும். 30 சென்டிமீட்டர் கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மண்ணில் நீர் உறிஞ்சிக்கொள்ளும் வரை மட்டும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். 6 மீட்டர் உள்ள பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். இடைவெளி 45*15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி உரங்கள் இட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : Dinakaran

கால்நடை தீவனப்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்


தீவனப்பயிர் சாகுபடி மற்றும் தீவன விதைகள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கால்நடைதுறை சார்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தீவன அபிவிருத்தி திட்டங்கள் பால்வள நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், இறவையில் தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் அதிக மகசூல் தரும் கம்பு பயிரிடும் திட்டம் 250 ஏக்கரிலும்.
மானாவரியில் தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் தீவனச்சோளம், தீவன தட்டைப்பயிறு பயிரிடும் திட்டம் 1000 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தீவனச்சோளம் மற்றும் தீவனதட்டைப்பயிறு விதைகள் 100 சதவீதம் மானியத்திலும், தீவன கரணை, தீவன விதைகள் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
அறுவடையின் பொழுது அவர்களிடமிருந்து சந்தை மதிப்புடன் கூடுதலாக கிலோ ஒன்றுக்கு ரூ.10 ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு விதைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. தீவனச் சோள விதைகள் 15 ஏக்கரிலும், தீவன
தட்டைப்பயிறு
விதைகள் 15 ஏக்கரிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
பயிற்சி தொகை: நவீன தீவன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் 100 கால்நடை வளர்ப்போருக்கு செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக அவர்களுக்கு தலா 500 ரூபாய் பயிற்சி தொகையாக வழங்கப்படவுள்ளது. புரசத்து மிகுந்த அசோலா பாசி வகை பசுந்தீவன உற்பத்தி திட்டத்தில் 120 பேருக்கு 100 சதவீத மானியத்தில் பிளாஸ்டிக் தட்டுகள் வழங்கப்படும். விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கப்பட்ட 1,500 பயனாளிகளுக்கு தலா 10 அகத்தி மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

சூரியஒளி மின்சாரத்தில் விவசாயம்: பூஞ்சோலை விவசாயி புது முயற்சி


கிருஷ்ணராயபுரம் அடுத்த பூஞ்சோலை பகுதி விவசாயி, சூரியஒளி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பூஞ்சோலை கிராம விவசாயிகள், தற்பொது அவர்களுக்கு தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் விளை நிலங்களில் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதன்மூலம், பல்வேறு வகைகளில் விவசாயம் செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில், நவீன முறை விவசாயத்தில், பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, இப்பகுதியில் உள்ள விவசாயிகள், சூரியஒளி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். தற்பொது, சூரிய மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் எடுக்கிறோம். குறைந்த செலவில், அதிக லாபம் தரக்கூடிய பப்பாளி சாகுபடி செய்து, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

நெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிப்பது தொடர்பான ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ஜெ. ராம்குமார் தொடக்கி வைத்தார். முனைவர் ச. ஆரோக்கிய மேரி நெல்லிக்கனியிலிருந்து மிட்டாய், ஜூஸ், பாக்கு தயார் செய்வது செயல்முறை விளக்கம் அளித்தார்.

பயிற்சியின்போது, நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என்றும் விளக்கப்பட்டது. 

Source : Dinamani

வேளாண் விரிவாக்க மையங்களில் மான்யத்துடன் விதை விநியோகம்

கரூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் நடவு பணி மேற்கொள்ள ஏதுவாக போதிய அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர். 20 க்கு மாற்றாக அதே குணங்களைக் கொண்ட கோ.ஆர் 50 குறுகிய கால சன்ன ரக நெல்லும், ஆந்திர பொன்னிக்கு மாற்றாக அதிக மகசூல் தரவல்ல கோ.ஆர் 51 மத்திய ரக நெல்லும் இருப்பில் உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோ விதைக்கு ரூ.10 மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் உரிய சான்றுடன் வெண்ணமலை,வேலாயுதம்பாளைம் துணை வேளாண் விரிவாக்க மையங்களையோ அல்லது 91598 09701 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கரூர் வெண்ணைமலை வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் ப. சிவானந்தம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

Saturday, September 17, 2016

பேரீச்சை மகத்துவம்


3
தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரீச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 3 பேரீச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரீச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்னைகள் இருப்பின், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்னைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும்.

பேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றன. பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக பேரீச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம். யார் ஒருவர் தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, ரத்த சோகை வரும் அபாயத்தை குறைக்கும். எனவே உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

Source : Dinakaran

சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு



வாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட வாழையின் மகத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.  வாழை பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் வாழைப்பூ, மோர். வாழைப்பூவின் மேலிருக்கும் தோல் பகுதியை நீக்கி பூக்களை எடுக்கவும். பூக்களின் தடிமனான தண்டு பகுதி, தோல் பகுதியை நீக்கவும். இதழ்களை பசையாக அரைக்கவும். இதிலிருந்து பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, அரை டம்ளர் மோருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும். ரத்த மூலம், சீத கழிச்சல் குணமாகும்.

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாழைப்பூவுக்கு உண்டு. ரத்தசோகை வராமல் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. இது, உடல் தேற்றியாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். வாழை பிஞ்சுவை துண்டுகளாக்கி உப்பு, நீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர், இந்த துண்டுகளுடன் அதிகம் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டுவர வயிற்று புண், வாய்ப்புண் சரியாகும். உணவுக் குழாயில் புண் இருந்தால் ஆறும்.

வாழையின் அனைத்து பகுதிகளும் துவர்ப்பு சுவையை அடிப்படையாக கொண்டது. அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு துவர்ப்பு சுவை உடைய உணவுகள் மருந்தாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் புண்கள் விரைவில் ஆறும். வாழை தண்டுவை பயன்படுத்தி சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, உப்பு, பூண்டு, மிளகு. வாழைத்தண்டுவை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் பூண்டு தட்டிப்போடவும். உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரக கற்கள் கரையும்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களை உடைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், புண்களை சரிசெய்யும். தேவையில்லாத கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம், ஊட்டத்தை தருகிறது.  வாய்ப்புண்ணுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிறு புண்ணாக இருந்தால்தான் வாய்ப்புண் வருகிறது. ரோஜா இதழ்களை அரைபிடி எடுத்து நீரில் இட்டு காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும்.

Source : dinakaran

உயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை



ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இல்லாமல் போகிறது. இப்பிரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். முருங்கை பூவை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், முருங்கை பூ, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூ சேர்த்து வதக்கவும். பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். சுவைக்காக பனங்கற்கண்டு சேர்க்கவும். இதை சாப்பிட்டுவர உயிரணுக்கள் அதிகரிக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசினை வாங்கி புளியங்கொட்டை அளவுக்கு எடுத்து அரை டம்ளர் நீரில் இரவில் ஊறவைக்கவும். காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர உயிரணு குறைபாடு நீங்கும்.  ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாடுகளை போக்கும் தன்மை முருங்கைக்கு உண்டு. முருங்கை பூ, காய், இலை ஆகியவை உயிரிணுக்கள் அதிகரிக்க பயன்படுகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், ஆவாரம் பூ, பாதாம், பால், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் நெய் விடவும். இதனுடன் ஆவாரம் பூ சேர்த்து வதக்கவும்.

அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். பின்னர், பால் ஊற்றி வேக வைத்து பனங்கற்கண்டு சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை காலை வேளையில் சுமார் 3 மாதங்களுக்கு எடுத்துவர உயிரணுக்களின் எண்ணிக்கை, பயணத் தன்மை அதிகரிக்கும். ஆவாரம் காய், இலை, பூ ஆகியவை மருந்தாகிறது. அமுக்ரா சூரணத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், அமுக்ரா சூரணம், பனங்கற்கண்டு, பால். அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடியுடன், ஒரு ஸ்பூன் அமுக்ரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.

இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இரவு தூங்கபோகும் முன்பு இதை குடித்துவர உயிரணு குறைபாடு நீங்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். நாட்டு மருந்து கடைகளில் அமுக்ரா சூரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நெஞ்சக சளியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 5 முதல் 10 மில்லி அளவுக்கு வெற்றிலை சாறு எடுக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரிசி திப்பிலியை வாங்கி பொடித்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து, வெற்றிலை சாறுடன் கலந்து கொடுத்துவர நெஞ்சக சளி கரையும். சுவாச கோளாறுகள், இருமல் குணமாகிறது.

Source : Dinakaran

Friday, September 16, 2016

பருத்தியில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ஆலோசனை


பருத்திச் செடியில் மாவு பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக  முக்கூடல் வேளாண் உதவி இயக்குநர் க. கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாப்பாக்குடி வட்டாரம் ஓடைமறிச்சான் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடியில் மாவுப் பூச்சித் தாக்குதல் தென்படுகிறது. இந்த தாக்குதலைக் கட்டுப்படுத்த களைகளை அகற்றி வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேப்பெண்ணெய் 2 லிட்டர் அல்லது வேப்பங்கொட்டை பருப்புச் சாறு 5 லிட்டர் அல்லது மீன் எண்ணெய் மற்றும் சோப்பு கரைசல் 1 லிட்டர் நீருக்கு 25 கிராம் என்றளவில் கலந்து தெளிக்கலாம். தாக்குதல் அதிகமாகத் தென்படின் புரபனோபாஸ் 2 மில்லி வீதம் 1லிட்டர் நீரில் கலந்து பயிர் நன்கு நனையுமாறு 15 நாளுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் என்றார் அவர்.

Source : Dinamani

'இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்'


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக இயற்கை வேளாண்மையை ஆர்வத்துடன் செய்துவரும் நிலையில், இந்த பாரம்பரிய முறையைப் பின்பற்றும் வகையில் அரசு ஊக்கமளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 வேளாண்மையில் பசுமைப் புரட்சி மூலம் உணவுப் பொருள்களின் மகசூல் பலமடங்காக உயர்ந்தன. இதனால் நாட்டில் பசி, பட்டினி போக்கப்பட்டது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டியதால், விளைநிலத்தின் தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரித்துள்ளது.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மையைப் பின்பற்றி சாகுபடி செய்து வருகின்றனர்.
 பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை வேளாண்மையை விவசாயிகள் ஆர்வத்துடன் பின்பற்றி வருவதைக் காண முடிகிறது. 
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,80,284 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் நெல், கேழ்வரகு, துவரை, நிலக்கடலை, கொள்ளு போன்ற பயிர்களும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் சராசரியாக நெல் பயிர் 26,200 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறு தானியப் பயிர்கள் 62,100 ஹெக்டேரிலும், பயறு வகைப் பயிர்கள் 59,300 ஹெக்டேரிலும், நிலக்கடலை 17,200 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
 பாராம்பரிய முறை:
 நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும் என்பது இயற்கை வேளாண்மையின் கோட்பாடுகளில் ஒன்று. அதன்படி, விவசாயிகள் நெல் நாற்று நடுவதற்கு முன் விளைநிலத்தில் அடியுரமாக வேம்பு, ஆமணக்கு போன்ற மரம், செடி ஆகியவற்றின் இலைகளை மக்கச் செய்கின்றனர். சிலர், ஆடு, மாடு, வாத்துக்கள் ஆகியவற்றை விளைநிலத்தில் மந்தை அடைத்தல் மூலம் மேயவிட்டு, அதன் கழிவுகளை உரமாக பயன்படுத்தும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
 பாரம்பரிய முறையில் சாகுபடி செய்யும் அவதானப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (45) கூறியது, தற்போதைய நவீன காலத்தில் கால்நடை மேய்ச்சல் தொழில் செய்யும் கிதாரிகள் முற்றிலும் குறைந்துவிட்டதால், விவசாயிகள் தாங்களே கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் விளைநிலங்களில் மந்தைகளை அடைக்கும் முறையை பின்பற்றி வருகிறோம். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்குதல் குறைகிறது என்றார். 
 வேப்பனஅள்ளி அருகே உள்ள நேரலகிரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலரும், இயற்கை வேளாண் ஆர்வலருமான அஸ்வத் நாராயணன் (78) தெரிவித்தது: தனது அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு எனது மாந்தோப்பில் இயற்கை வேளாண் முறையில் மா மரங்களைப் பராமரித்து வருகிறேன். இதனால், தோட்டத்தில் அறுவடை செய்யப்படும் காய்கள், பழங்கள் தரமானதாகவும், பூச்சித் தாக்குதல் இல்லாததாகவும் உள்ளன. இதனால், என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்து சுற்றியுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனவே, விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விழிப்புணர்வும், ஊக்கமும் அரசு அளிக்க வேண்டும் என்றார்.
 கிருஷ்ணகிரி அருகே கூட்டாக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறும்போது, மண் மலட்டுத்தன்மை அடைவதை இயற்கை வேளாண்மை மூலம் தடுக்க முடியும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் சிறுநீரைக் கொண்டு பூச்சிக்கொல்லி தெளிப்பானாகப் பயன்படுத்தும் முறையை ஊக்கப்படுத்த வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் குறைவாக உள்ளது என வேதனைப்பட்டனர்.
 பரம்பரை இயற்கை வேளாண்மைத் திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரம்பரை இயற்கை வேளாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.
 நிகழாண்டில் தளி, மத்தூர், ஊத்தங்கரை, கெலமங்கலம் ஆகிய வட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுக்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சியும், நிதியும் அளித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இயற்கை முறை வேளாண்மை தொழில்நுட்பத்தை விவசாயிகள் தங்களது குடும்ப அளவிலேயே பயன்படுத்தி வரும் நிலையில், அந்த தொழில் நுட்பத்தைக் கைவிடாமல் மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் அரசு அதிக ஊக்கமும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source : Dinamani

தீவனப் பயிர் வளர்க்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தீவனப் பயிர் வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையிலும், மானியத்துடன் கூடிய மாநில தீவன உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
 இத் திட்டத்தில், நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகளுக்கு, வீரிய கம்பு நேப்பியர், 0.25 ஏக்கருக்கு (4,000 ஸ்லிப்ஸ்) ரூ.2,000 செலவுத்தொகை வழங்கப்படும். இறவை தீவனப் பயிர் உற்த்தி செய்ய 500 ஏக்கர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு, மானாவாரி தீவன உற்பத்திக்காக 0.25 ஏக்கருக்கு 3 கிலோ சோளம் மற்றும் ஒரு கிலோ தட்டைப் பயிறு இலவசமாக வழங்கப்படும். நிகழாண்டு 3,000 ஏக்கரில் மானாவாரி தீவனம் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 முன்னோடி விவசாயிகள் மூலம் தரம் நிர்ணயம் செய்யப்பட்ட விதைகள் உற்பத்தி செய்ய 30 ஏக்கர் தீவன சோளமும், 20 ஏக்கர் தட்டைப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 மின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 60 சதவீதம் மானியத்தில், 70 விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பால் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கில், குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா பாசி உற்பத்தி செய்ய 200 பேருக்கு, அசோலா தொட்டி மற்றும் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும். பசுந்தீவனம் மற்றும் கரும்புத் தோகையைப் பதப்படுத்தி தீவனப் பற்றாக்குறை உள்ள காலத்தில் பயன்படுத்தும் வகையில், ஊறுகாய் புல் தயாரிக்க 700 பேருக்கு, இலவசமாக தலா 4 சைலேஜ் பைகள், இடுபொருள்கள் வழங்கப்படும். இரண்டு கறவை மாடுகள் உள்ள சிறு, குறு விவசாயிகள், விலையில்லா கறவை பசு திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 ஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே பயன் பெற முடியும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது. பயனடைய விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் அளித்து, பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
 

Source : Dinamani

வேளாண் துறையில் மானிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு: வேளாண் உதவி இயக்குநர் தகவல்


தாராபுரம் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பெற பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் கூறியதாவது:
தாராபுரம் வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்படும் நெல் விதைகளுக்கு
ரூ.10 மானியம் என்ற அளவில் விநியோகம் செய்ய 17 மெட்ரிக் டன் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நெல் இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதற்கு ஹெக்டருக்கு ரூ. 5,000 மானியத்தில் 400 ஹெக்டர் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
வரப்பில் பயிர் வகை சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ. 150 என்ற அளவில் 295 ஹெக்டரும், பயிர் வகை விதைகள் உற்பத்திக்கு கிலோ ரூ. 25 என்ற அளவில் 4 மெட்ரிக் டன்னும், பைப்லைன் விநியோகத்துக்கு ரூ.15 ஆயிரம் எண் மானியத்தில் 7 எண்களும், உயிர் உரங்கள் விநியோகம் செய்ய ஹெக்டருக்கு ரூ.150 என்ற அளவில் 50 ஹெக்டரும், கரும்பில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.8,000 என்ற அளவில் 50 ஹெக்டருக்கும் கரும்பு பயிரின் இடையில் கரும்புத் தோகை முடக்கு அமைக்க ஹெக்டருக்கு ரூ.2,500 மானியம் என்ற அளவில் 40 ஹெக்டருக்கும், மண்வளத்தை பெருக்க பசுந்தாள் உரவிதைகள் விதைப்பு மேற்கொண்டமைக்கு ஹெக்டருக்கு ரூ.1,500 என்ற அளவில் 100 ஹெக்டேருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டஹ்தில் 15 ஆண்டுகளுக்கு உள்பட்ட பயறு வகை ரகங்களும் கிலோ ரூ. 25 என்ற அளவில் 2.3 மெட்ரிக் டன்னும், 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட பயறு வகை ரகங்களுக்கு கிலோ ரூ.25 என்ற அளவில் ஒரு மெட்ரிக் டன்னும், மக்காச்சோள பயிருக்குப்பின் உளுந்து சாகுபடி செய்யப்படும் செயல்விளக்க திடலுக்கு ஹெக்டருக்கு ரூ.10,000 என்ற அளவில் 100 ஹெக்டேரும், விதை தெளிப்பான் விநியோகம் செய்ய ரூ.3,000 என்ற அளவிலும் ரொட்டாவெட்டர் கருவிக்கு ரூ.35,000 என்ற அளவிலும், டிராக்டர், சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மானியமும் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
விதை கிராம திட்டத்தில் நெல் விதை விநியோகம் செய்ய 5 மெட்ரிக் டன்னும், சிறு தானியம் விநியோகம் செய்ய 200 கிலோவும், பயறு வகை விநியோகம் செய்ய 600 கிலோவும், எண்ணெய் வித்துக்கு 4 மெட்ரிக் டன்னுக்கு 1 லட்சம் என்ற அளவில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் பல்வேறு மானிய திட்டத்துக்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
எனவே, பயனாளிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் எல்.ரவிக்குமார் 9003587754, பி.கருப்பையா 9363242535, பாலுசாமி 9994778487, தேசிங்குராஜன் 8883728191 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source : Dinamani

தீவனப் பயிர் வளர்க்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தீவனப் பயிர் வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையிலும், மானியத்துடன் கூடிய மாநில தீவன உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
 இத் திட்டத்தில், நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகளுக்கு, வீரிய கம்பு நேப்பியர், 0.25 ஏக்கருக்கு (4,000 ஸ்லிப்ஸ்) ரூ.2,000 செலவுத்தொகை வழங்கப்படும். இறவை தீவனப் பயிர் உற்த்தி செய்ய 500 ஏக்கர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு, மானாவாரி தீவன உற்பத்திக்காக 0.25 ஏக்கருக்கு 3 கிலோ சோளம் மற்றும் ஒரு கிலோ தட்டைப் பயிறு இலவசமாக வழங்கப்படும். நிகழாண்டு 3,000 ஏக்கரில் மானாவாரி தீவனம் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 முன்னோடி விவசாயிகள் மூலம் தரம் நிர்ணயம் செய்யப்பட்ட விதைகள் உற்பத்தி செய்ய 30 ஏக்கர் தீவன சோளமும், 20 ஏக்கர் தட்டைப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 மின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 60 சதவீதம் மானியத்தில், 70 விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பால் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கில், குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா பாசி உற்பத்தி செய்ய 200 பேருக்கு, அசோலா தொட்டி மற்றும் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும். பசுந்தீவனம் மற்றும் கரும்புத் தோகையைப் பதப்படுத்தி தீவனப் பற்றாக்குறை உள்ள காலத்தில் பயன்படுத்தும் வகையில், ஊறுகாய் புல் தயாரிக்க 700 பேருக்கு, இலவசமாக தலா 4 சைலேஜ் பைகள், இடுபொருள்கள் வழங்கப்படும். இரண்டு கறவை மாடுகள் உள்ள சிறு, குறு விவசாயிகள், விலையில்லா கறவை பசு திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 ஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே பயன் பெற முடியும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது. பயனடைய விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் அளித்து, பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
 

Source : Dinamani