Wednesday, March 2, 2016

புதியரக நிலக்கடலை அறிமுகம்


திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம், புதிய நிலக்கடலை ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் நிலக்கடலையில் அதிக மகசூலை பெறுவதற்காக புதிய ரகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் முதல்நிலை செயல் விளக்கம் மூலம் (டிஎம்வி13) என்ற புதிய நிலக்கடலை ரகத்தை தொகுப்பு முறையில் செயல்படுத்தி வருகிறது.
இத்தொகுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்தில் விவசாயிகள் நிலங்களில் 25 ஏக்கர் தொடர்ச்சியாக, இந்த நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மேல்மலையனூர் வட்டாரத்தில் பெரிய நொலம்பை, சின்ன சேலம் வட்டத்தில் அம்மகளத்தூர், வானூர் வட்டத்தில் காரட்டை ஆகிய இடங்களில், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த புதிய ரகம் அதிக எண்ணெய் சத்து கொண்ட வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பிரதான சாலையோரமாக அமைந்துள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அருகில் உள்ள மற்ற கிராம விவசாயிகளும் புதிய ரகம் மற்றும் சாகுபடி முறையைக்கண்டு விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source : Dinamalar

விவசாயிகள், வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி


பழநி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் சீப்பர்ஸ் அட்மா திட்டம் மூலம் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
பழநி வேளாண் உதவி இயக்குனர் சுருளியப்பன் தலைமை வகித்து பயிர் கழிவுகள் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், ""மண்புழு உரக்கூடம் அமைத்து அறுவடைக்குபின் பயிர்களின் கழிவுகளை சிறந்து முறையில் பயன்படுத்துவதால் உரச்செலவு குறைவாக இருக்கும். மண்வளம் பெருகும். மேலும் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு நன்மை செய்து பயிர் அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும், என்றார்.
உழவர்சந்தை அலுவலர் காளிமுத்து தென்னை மரங்களின் கழிவுகளை பயன்படுத்துவது எப்படி, மக்காச்சோள பயிர் கழிவுகள் மேலாண்மை குறித்து பேசினார். அட்மா திட்ட மேலாளர் கோசல்நாத், உதவி தொழிற்நுட்ப மேலாளர்கள் மணிகண்டராஜா, ஜெகநாதன ஏற்பாடுகளை செய்தனர்.


Source : Dinamalar

விவசாயிகளுக்கு மண்வள அட்டை8000:இம்மாத இறுதிக்குள் வழங்க உத்தரவு


திண்டுக்கல்லில் 2ம் கட்ட மண் பரிசோதனை ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் கூடுதலாக 8 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய மண்வள அட்டை இயக்கம் செயல்பட்டு வருகிறது. மண்வளத்தை பற்றி முழுமையாக அறிய, மண்ணிலுள்ள சத்துக்களின் விவரங்களை அட்டவணைப்படுத்தி, அதில் என்ன பயிர் வகைகளை விளைவிக்கலாம் என்பதை குறிக்கும் மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் மண்ணுக்கேற்ற சத்துடைய உரமிடுவர். அதனால் மண்ணின் தன்மை மாறி விளைச்சல் அதிகரிக்கும். மத்திய அரசு இம்மண்வள அட்டை திட்டத்தை கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. 2017க்குள் அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட இடத்தில் சிறிதளவு மண்ணின் மாதிரியை சோதனை செய்து, அதன் தன்மையை ஜி.பி.எஸ்., மூலம் எல்லோரும் அறிந்து கொள்ளும் விதமாக கணினியில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் இணைய தளம் மூலமாகவும் பல்வேறு இடங்களில் உள்ள மண்ணின் தன்மை, அதில் விளையும் பயிர்களின் விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். கூடுதலாக 8 ஆயிரம் அட்டை:திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நீர் மற்றும் நீரற்ற நிலபரப்பு என பல்வேறு இடங்களில் மண் மாதிரி பரிசோதனை செய்து 10 ஆயிரத்து 540 மண்மாதிரி சோதனைகளுடன் மண்வள அட்டை வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மார்ச் 2017க்குள் 14 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் மண் மாதிரி பரிசோதனை ஆய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் திண்டுக்கல்லில் 2ம் கட்ட மண் பரிசோதனை ஆய்வு செய்து, கூடுதலாக 8 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

source : Dinamalar

வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ.55.28 லட்சம் ஒதுக்கீடு


திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ.55.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட விவசாயிகள், சிறு, குறு  விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ.10.08 லட்சமும், இதர விவசாயிகளுக்கு ரூ.8.43 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், ஆதி திராவிட விவசாயிகளுக்கு, ரூ.6.13 லட்சமும், இதர விவசாயிகளுக்கு ரூ.30.64 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சுழல் கலப்பை, நாற்று நடும் கருவி, களை எடுக்கும் கருவி, உழுவை 15-20 ஹெச்பி, 20-40 ஹெச்பி, 40-70 ஹெச்பி மற்றும் குழிதோண்டும் கருவி, விசை தெளிப்பான், விசை உழுவை, கையினால் இயக்கப்படும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான கருவிகளைப் பெற திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல் மற்றும் விண்ணப்பதாரரின் புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விவசாயி நேரில் வந்து அலுவலகப் பதிவேட்டில் கையொப்பமிட்டு பதிவு செய்ய வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும் நிதிக்கேற்ப தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு கருவிகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி அலுவலகத்தை 0462-2552572, 94433 65790 என்ற எண்களிலும், சேரன்மகாதேவி அலுவலகத்தை 94431 53243 என்ற எண்ணிலும், தென்காசி அலுவலகத்தை 04633  280160, 94883 78904 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Source : Dinamani

செட்டிநாடுக்கு 1,000 டன் பொதுரக நெல் அனுப்பிவைப்பு


நீடாமங்கலத்திலிருந்து செட்டிநாடுக்கு 1,000 டன் பொதுரக நெல் அரவைக்காக செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தொடர்ந்து அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் 87 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.
நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் 70 பேர் சரக்கு ரயிலின் 29 பெட்டிகளில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து, நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் செட்டிநாடுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Source : Dinamani

பாமாயில் சாகுபடி கண்டுணர்வு பயிற்சி சுற்றுலா


போளூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப்பனை (பாமாயில்) இயக்கத் திட்டத்தின் கீழ் எண்ணெய்ப்பனை பயிரிடுவது குறித்த கண்டுணர்வு பயிற்சி சுற்றுலாவுக்காக விவசாயிகள் அண்மையில் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள எண்ணெய்ப்பனை வயல்களுக்கு போளூர் வட்டார வேளாண் துறை சார்பில் இந்தப் பயிற்சிக்காக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் பயிற்சியின்போது, எண்ணெய்ப்பனை சாகுபடி விவசாயிகளுக்கு அரசு சார்பில் 8 ஆயிரம் எண்ணெய்ப்பனைக் கன்றுகள் மானியத்திலும், ஹெக்டேருக்கு முதலாமாண்டு பராமரிப்பு செலவாக ரூ.4 ஆயிரமும், ஊடு பயிராக சாகுபடி செய்ய ரூ.3 ஆயிரமும் மானியமாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மேலும், அடுத்த ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ.4 ஆயிரமும், ஊடு பயிராக சாகுபடி செய்ய ரூ.3 ஆயிரமும் அரசு மானியம் வழங்கப்பட உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
இந்தப் பயிற்சியின் மூலம் எண்ணெய்ப்பனை சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொண்டனர். முன்னதாக விவசாயிகள் சென்ற பேருந்தை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், போளூர் வேளாண்மை உதவி இயக்குநர் வடமலை ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர்கள் அசோக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விவசாயிகளுடன் சென்றனர்.

Source : Dinamani

7.15 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


மாவட்டத்தில் 7.15 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் தாக்குதல் வராமல் தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுக்கு 2 முறை இலவச கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
10-ஆம் சுற்று தொடக்கம்: இந்நிலையில், 10-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 2016-ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலையை அடுத்த சு.ஆண்டாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் முகாமைத் தொடங்கி வைத்தார்.
119 மருத்துவக் குழுக்கள்: மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி போட 119 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் 7 லட்சத்து 15 ஆயிரத்து 603 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது  என்று விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Source : Dinamani