பலத்த காற்றின் காரணமாக, வாழைகள் சேதமடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் வீசும் பலத்த காற்றின் காரணமாக, வாழைகள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைகின்றனர். பல்லடம் வட்டாரத்தில் கடந்த ஆண்டு வீசிய காற்றின் காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தின.
தற்போது பல்லடம் வட்டாரத்தில் காற்று பலமாகி வீசி வருவதாக, விவசாயிகள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காற்றிலிருந்து பயிர்களை காப்பதற்கான வழிமுறைகளை, பல்லடம் தோட்டகலை துறை அறிவுறுத்தி உள்ளது.
தோட்டக்கலை துறை உதவி அலுவலர் மலர்மண்ணன் கூறியதாவது:
பருவ காற்று காலங்களில், வாழைகள் சேதமாவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பொதுவாகவே சவுக்கு மரங்களை வளர்ப்பது, காற்றை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும். தோட்டத்தை சுற்றி, வேலி போன்று சவுக்கு மரங்களை வளர்ப்பது, காற்றிலிருந்து பயிர்களை காப்பதுடன், தோட்டத்துக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
காற்றிலிருந்து தற்காலிகமாக பயிர்களை காக்க, கடைகளில் விற்கும் பச்சை நிற வலைகள் கொண்டு தடுக்கலாம். ஆனால் அவை தற்காலிக பாதுகாப்பு மட்டுமே; நிரந்தர பாதுகாப்பினை ஏற்படுத்த, சவுக்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
No comments:
Post a Comment